×

குமரியில் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பிடித்தம் செய்த கூட்டுறவு சங்க பணம் ரூ.9.38 கோடியை செலவு செய்த அரசு போக்குவரத்து கழகம்:

நாகர்கோவில்: குமரி அரசு போக்குவரத்து கழக கூட்டுறவு சங்கத்துக்காக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த சேமிப்பு தொகை ரூ.9.38 கோடியை வழங்காமல் நிர்வாகம் செலவு செய்து உள்ளது. குமரி மாவட்டத்தில் ராணித்தோட்டம் 1, 2, 3, செட்டிக்குளம், விவேகானந்தபுரம் உள்பட 13 இடங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள உறுப்பினர்களுக்கு சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு போக்குவரத்து கழக நிர்வாகமே இந்த தொகையை பிடித்தம் செய்து, கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கும். குறைந்தபட்சம் ரூ.500-ரூ.2 ஆயிரம் பிடித்தம் செய்வார்கள். இந்த சங்கம் மூலம் மருத்துவ செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தொழிலாளர்கள் கடன் உதவி பெற்று வந்தனர்.

இந்தநிலையில் 2 ஆண்டாக தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகையை, அரசு போக்குவரத்து கழகம் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது. கடைசியாக கடந்த 2017ம் மார்ச் மாதம் கூட்டுறவு சங்கத்துக்கு பணத்தை கொடுத்துள்ளனர். அதன்பின்னர் பணத்தை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் வழங்கவில்லை. ஆனால் மாதந்தோறும் தொழிலாளர்களிடம் இருந்து மட்டும் பணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த வகையில் 9 கோடியே 38 லட்சத்து 70 ஆயிரத்து 265 ரூபாய் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், கூட்டுறவு சங்கத்துக்கு வழங்க வேண்டி உள்ளது. இதனால், தொழிலாளர்களால் கடன் பெற முடியவில்லை. கூட்டுறவு சங்க சட்ட விதிகளின்படி தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை 14 நாட்களுக்குள் நிர்வாகம், சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் நிர்வாகமோ 2 ஆண்டு வழங்காமல் அந்த பணத்தை செலவு செய்து வருகிறார்கள். இதற்கு தொழிற்சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்னை குறித்து, அரசு போக்குவரத்து கழக கூட்டுறவு சங்க தலைவர் கண்ணனிடம் கேட்டபோது கூறுகையில், தொழிலாளர்களுக்கான பணத்தை தருமாறு நிர்வாகத்திடம் முறையிட்டு வருகிறோம். அவர்கள், அரசு நிதி உதவி தந்தால்தான் தர முடியும் என்கிறார்கள். எனேவ, பணத்தை கேட்டு நீதிமன்றத்தை நாட உள்ளோம்’ என்றார். போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாகர்கோவில் மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் திருவம்பலம்தான், நிர்வாக இயக்குனராக உள்ளார். அவர், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்வார்’ என்றார்.

Tags : Drivers ,Kumari ,Cochin ,Conductors Union ,government transport corporation , Drivers in Kumari, Conductors, Capture, Cooperative Union Money, Expenditure, Government Transport Corporation
× RELATED சுரங்கப்பாதைகளில் தண்ணீர்...